திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம். குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1931 

Rate this item
(0 votes)

தலைவரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களேய இன்று நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயமான “கராச்சிக் காங்கிரசும், சுயமரியாதையும்" என்பது நோட்டீசில் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. இதைப்பற்றி பல இடங்களில் பேசியும், எழுதியு மிருக்கின்றேனே யென்று சொல்லியும் கூட யாரோ சிலரால் "கராச்சிக் காங்கிரசுக்கும், காங்கிரஸ் தீர்மானங்களுக்கும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கும் வித்தியாச மில்லையாதலால் சுயமரியாதை இயக்கம் வேண்டியதில்லை" யென்று சொல்லப்படுவதாகவும், அதை நம்பி சில வாலிபர்கள் காங்கிரசில் கலந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் தெரியவருவதால், இரண்டுக்குமுள்ள சம்பந்தத்தைப்பற்றி எடுத்துச் சொல்ல வேண்டுமென்றே. இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டுமென்று குறிப்பிட்டதாகச் சொன்னார்கள். ஆகவே, இப்பொழுது நான் இதைப்பற்றி பேசுவேனென்பதாகக்கருதி, அதிலும் இது சம்பந்தமான எனதபிப்பிராயத்தை உள்ளபடி சிறிதும் ஒளிக்காமல் எனக்குப் பட்டதை சொல்லுவேனென்று யெண்ணி, நீங்களித்தனை பெயர்கள் இன்று இங்கு கூடியிருக்கிறீர்கள். ஆகவே நான் இந்தச் சமயத்தில் யாருக்காவது பயந்து கொண்டோ, யார் தாட்சன்னியத்திற்காவது மயங்கிக்கொண்டோ எனதபிப்பிராயத்தை உள்ளபடி வெளியிடாமல் மறைத்துப் பேசுவேனே யானால், உங்களை ஏமாற்றியவனென்பதாக ஆவதோடு, நானும் ஒரு பயங் காளியென்பதாகவே யாகிவிடுவேன். இந்தப்படி நீங்கள் ஏமாற்றப்படுவ தாலும், நான் பயப்படுவதாலும், யாருக்கென்ன வாபம் ஏற்படக்கூடும்? நாங்கள் ஏதாவது உங்களிடம் பணம் பறிக்கவோ, பத்திரிகை பிரசாரம் செய்யவோ அல்லது யாரிடமாவது சம்பளம் பெற்று கூலிப்பிரசாரம் செய் யவோ, அல்லது உங்களுடைய ஓட்டுகளை யாருக்காவது வாங்கிக் கொடுக்க ஏஜண்டுகளாகவோ, தரகர்களாகவோ, அல்லது வயிற்றுப்பிழைப்புக்கே இதையொரு தொழிலாகக் கொண்டு, புராணப் பிரசங்கிகளைப் போல உங்களை ஏமாற்றி திருப்தி செய்து விட்டுப் போகவோ அவசியமுடையவர் களாக இங்கு இப்போது வரவில்லை. எதோ எங்களுடைய வாழ்நாட்களானது வீணாகாமலும், எங்கள் வயிற்றுப்பிழைப்புக்கும், வாழ்க்கை , சுகபோக ஆசைக்குமே வீணாகக் கழியாமல் ஏதாவதொரு பயனுள்ள காரியத்தை செய்து விட்டு அதுவும் எங்களுக்கு உண்மையாகவும், உறுதியாகவும், சரி யென்று பட்ட காரியத்தையே செய்துவிட்டு முடிவெய்தலாமே யென்கிற யெண்ணத்தின் மீதே சகல சுக, துக்க பலன்களுக்கும் துணிந்து உண்மை பென்றுபட்டதை யெடுத்துச் சொல்ல வந்திருக்கின்றோம். 

ஆகவே, சகோதரர்களே! நீங்களும் இது போலவே இந்த விஷயத் தில் நியாயமாகவும், யோக்கியமாகவும் நடந்து கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். எதற்காக வென்றால் நாங்கள் சொல்லுவதை அப்ப டியே நம்பி, மோசம் போய் விடாதீர்களென்பதற்கும், வேறு எந்தக் காரணத் தினாலாவது நாங்கள் சொல்லும் விஷயங்களுக்குள் புகுந்து பாராமல் அப்படியே தள்ளி விடாதீர்களென்பதோடு எங்களுடைய சொந்த பெருமை, சிறுமை ஆகியவைகளை யுத்தேசித்து விஷயங்களை மதிக்காதீர்கள் என்பதற்குமாகத்தான் இப்படிச் சொல்லுகிறேன். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய சொந்த அறிவையும் ஆராய்ச்சியையும் கொண்டு, நடுநிலைமையிலிருந்து அலசிப்பார்த்து தள்ளுவதைத் தள்ளி, கொள்ளுவதைக் கொள்ளுங்கள். அந்த தைரியத்தைக் கொண்டு தான் நாங்களும் தைரியமாய் உண்மையென்று பட்டதை பேசுகிறோம். 

நாங்கள் சொல்லும் விஷயங்கள் உங்களுக்குப் புதிதாகயிருக்கலாம். அசாத்தியமாகயிருக்கலாம், ஆச்சரியமாகவிருக்கலாம். திடுக்கிடக்கூடிய தாகவிருக்கலாம். உங்களுடைய உணர்ச்சிக்கும் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் விரோதமாயிருக்கலாம். அன்றியும், நாங்களிதற்கு முன் எப்போதாவது வெளிப்படுத்தின அபிப்பிராயங்களுக்கு மாறுபாடாயிருந் தாலும், அவற்றைவிடத் தீவிரமானதாயிருந்தாலுமிருக்கலாம். எப்படியிருந்த போதிலும் நீங்கள் மாத்திரம் நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால் தான், ஏமாராதிருக்க முடியுமே யொழிய மற்றப்படி மத விஷயத் தைப்போல் அரசியலிலும் யார் சொல்லுவதையும் நம்ப வேண்டுமென்றும், நம்பாவிட் டால் பாவம், நரகம் வந்துவிடுமோ என்று பயப்படுகின்ற தன்மை போலும் வைத்துக் கொண்டால் கண்டிப்பாய் இதிலும் ஏமாந்துதான் போக முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டு மேலே பேசுகிறேன். 

சகோதரர்களே! கராச்சி காங்கிரசும், சுயமரியாதையும் என்னும் விஷ யத்தில் எங்களபிப்பிராயத்தைச் சொல்லுவதென்பதில் முதலாவது நாங்கள தற்குத் தகுந்தவர்களாயென்பதும் கவனிக்க வேண்டிய விஷயந்தான், எங்களைப் பொறுத்தவரை நாங்கள் காங்கிரஸ் என்பதிலும் கொஞ்சகாலம் உழைத்து அதன் தத்துவங்களையும் உள் பிரகாரத்திலிருந்து மனப்பூர்வமா யுணர்ந்தவர்களேயாவோம். அத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும், ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கும் பல தடவை ஆளானவர்களுமாவோம். 

இன்னும் விவரமாய்ச் சொல்ல வேண்டுமானால் அதற்காகப் பல தடவை சிறைக்கு" சென்றுவந்தவர்களுமேயாவோம். அதன் பெருமை யை யுத்தேசித்து இப்பொழுது உங்களிடம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனாலும் கஷ்டத்திற்கு பயந்து கொண்டு நாங்கள் ஏதோ இவ்வித அபிப்பிராயம் சொல்லுவதாக சொல்லுகின்றவர்களுடைய வார்த்தைக்கு சமாதானம் தெரியாமல் திண்டாடாதீர்கள் என்பதற்காகத்தானே சொல்ல வேண்டியவனாவேன். அன்றியும், நாங்கள் காங்கிரசின் கொள்கைகள், திட்டங்கள், தீர்மானங்களாகியவைகளின் உள்யெண்ணம் என்னவென்பதும், வெளியெண்ணமென்னவென்பதும் அவற்றை தீர்மானிக்கும் முறை எப்படி யென்பதும், அதன் தலைவர்கள், தொண்டர்களாகியவர்களின் தன்மை எப்படிப்பட்ட தென்பதையும், அத்திட்டங்களையும், தீர்மானங்களையும் பிரசாரம் செய்யும் மாதிரியும் அமுல் நடத்தும் மாதிரியும், அதிலுள்ள நாணயங்களும், அதனாலேற்படும் பயன்களும் நன்றாய் அறிந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களே யாவோம். அதோடு சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், அதன்பேரால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள். திட்டங்கள், அதன்பயனாய் ஏற்பட்ட பலன்கள் ஆகியவைகளையும். நன்றாயறிந்திருக்கிறோமென்றே கருதிக் கொண்டிருக்கிறவர்களாவோம். ஆதலால், மேற்கண்ட இரண்டு விஷயத்திலும் சிறிதாவது அனுபோகங் கொண்டே பேசுகிறோமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், 

சகோதரர்களே! என்னுடைய சொந்த கருத்துப்படி காங்கிரசும். சுயமரியாதையும் ஒன்றுக் கொன்று மாறானது என்பதோடு குறிப்பாக கராச்சிக் காங்கிரசினால் நாட்டு மக்களின் உண்மையான சமதர்மத்துக்கும், மற்ற நலத் துக்கும் எவ்வித அனுகூலத்தையும் விளைவிக்காதென்பதோடு. அதனால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் நடைபெறவும். மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியேற்படவும், இடையூறு ஏற்படுமென்றும் நான் கருது கிறேன். இரண்டினுடைய அடிப்படையான கொள்கைகளே ஒன்றுக் கொன்று மாறானதாகுமென்றும் கருதுகின்றேன். 

உதாரணமாக சில கூறுகிறேன். சகோதரர்களே! நமது சுயமரியதை இயக்கத்தின் கொள்கைப்படி, முதலாவதாக மதமும், ஜாதியும், கடவுளுணர்ச் சியும் மக்களிடத்திலிருந்து விலக்கப்பட வேண்டியதவசியமாகும். காங்கிரஸ் கொள்கைப்படி மதமும், ஜாதியும், கடவுளுணர்ச்சியும் முறை பிசகாமல் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமாகும். சுயமரியாதைக் கொள்கையில் பிராமணனென்பவறும், பறையனென்பவறும் நாட்டிலிருக் கக்கூடாது. காங்கிரஸ் கொள்கைப்படி அவர்களிருந்துதான் தீருவார்கள். 

சுயமரியாதைக் கொள்கையில் இந்துமதமென்பதும், மநுதர்ம சாஸ்திர மென்பதும் அழிக்கப்படவேண்டும். காங்கிரஸ் கொள்கையில் இந்துமதமும், மநுதர்மசாஸ்திரமும் காப்பாற்றப்படவேண்டும். 

சுயமரியாதைக் கொள்கையில் இராம இராஜ்யம், ஹரிச்சந்திர இராஜ்ய மாகிய இந்துமத ஆதார புராண இராஜ்ய பாரங்கள் - இராஜ்ய முறைகள் 

அழிக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி, இராம இராஜ்யமும், ஹரிச்சந்திர இராஜ்யமும் புதுப்பித்தாக வேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி இந்த கார் கமலாலய கோவிலின் கட்டட விஸ்தீரணமாகிய ஐந்து வேலி விஸ்தீர்ணமுள்ள இடம் சமநிலை யாக்கப்பட்டு, பயிர் செய்யப்பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கொள்கைப் படி கமலாலயத்தையும். அதைச் சுற்றிலுமுள்ள குட்டிச் சுவர்களையும் பந்தோபஸ்தாய்க் காப்பாற்ற வேண்டும். 

கயமரியாதைக் கொள்கைப்படி, ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி, சோம்டோரி - பாடுபடுபவன், மேல் ஜாதி - கீழ் ஜாதி, மிராசுதாரன் பயிர் செய்டவன். ஜமீன்தாரன் - குடியானவன், மேல்வாரக்காரன் - கீழ்வாரக் காரன் என்கின்ற தன்மைகளிருக்கக் கூடாது. காங்கிரஸ் கொள்கைப்படி இவர்கள் ஒவ்வொருவருடைய பிறப்புரிமைகளையும், அதாவது அவரவர் கள் பிறக்கும் போது இருந்த சொத்துரிமைகளைக் காப்பாற்றி, அவரவர் களுக்கு மதத்தின் பேரால், வர்ணாச்சிரம தர்மத்தின் பேரால், சாஸ்திரங்களில் கூறியுள்ள நீதி நிபந்தனைகளின் பேரால் உள்ள உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். 

சுயமரியாதைக் கொள்கைப்படி ஆயிரம்வேலி, இரண்டாயிரம் வேலி நிலமுள்ள மடாதிபதிகளும், கோயில் சாமிகளும் ஒழிக்கப்பட வேண்டும். அவைகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தும், மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தவும் வேண்டும். காங்கிரஸ் கொள்கைப் படி மடங்களையும். சாமிகளையும், காப்பாற்றுவதோடு அதன் சொத்துக்களையும், மடங்களுக்கும், சாமிகளுக்கும் பழைய வழக்கப்படி, மாமூல்படி அடைந்து கொண்டிருக்கச் செய்யவேண்டும். 

சுயமரியாதைக் கொள்கைப்படி மடாதிபதிகளும், சங்கராச்சாரியார் களும், மதப்பிரசார சன்னியாசிகளென்பவர்களும் பட்டாளத்தில் சேர்க்கப் படவும், விவசாயத்திலமர்த்தப்படவும் செய்வதோடு, சக்தியில்லா தவர்களை தானியக்களஞ்சியங்களை சோம்பேரிகள் கொள்ளை கொள்ளாதடாடி காவல் காக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி இம் மடாதிபதிகளையும், சங்கராச்சாரிகளையும், நூற்றுகணக்கான மக்கள் பல்லக்கில் ஊரூராய் சுமந்துகொண்டு, அவர்கள் கால்களை பாதத்தை கழுவினத்தண்ணீரை மக்களுக்குக் குடிப்பித்து, அதற்காக வரிகள் வசூலித்துக் கொண்டிருக்க வேண்டும். 

சுயமரியாதைக் கொள்கைப்படி மக்களுக்கு மேல்லோகம்- கீழ் லோகம், மோட்சலோகம் - பிதுர்லோகம் என்கின்றதான பித்தாலாட்டங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி செத்துப் போனவர்களுடைய ஆவியை மோட்சலோகத்திற்கும், பிதுர்லோகத் திற்கும் அனுப்புவதற்கு பிணங்களின் எலும்புகளையும், சாம்பலையும், கங்கையில் போட வேண்டும். 

சுயமரியாதைக் கொள்கைப்படி, ஆத்மாவே சந்தேகம், காங்கிரஸ் கொள்கைப்படி மகாத்மாக்கள், குட்டி மகாத்மாக்கள் உண்டு இப்படிப்பட்டவையான அநேக வித்தியாசங்கள் இன்றைய காங்கிரஸ், காங்கிரஸ் கருத்தாக்கள், காங்கிரசின் ஏகநாயகர்களாகியவர்களுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இருந்து வருகின்றன. இவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு "காங்கிரசுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் வித்தியாசமில்லை" என்றும் "காங்கிரசில் பூரண சுயேச்சை உண்டு" யென்றும், பொதுவுடைமைத் தத்துவம், சமதர்மக் கொள்கை ஆகியவைககள் உண்டு, என்றும் பேசுவதில் யோக்கியப் பொறுப்போ, நாணயப் பொறுப்போ இருக்க முடியுமா? வென்பதை யோசித்துப் பாருங்கள். 

சகோதரர்களே 

இந்த நாட்டின் சொத்துக்களெல்லாம் கடவுள்களுடையதாகவும், சம்பாதனைகளெல்லாம், மோட்சப் பிரவேச அனுமதிச் சீட்டுக்கும், வழிப் பிரயாணதுக்குமாகவும், மக்களின் சூட்சிக்காரர்களெல்லாம் மோட்சவழி காட்டிகளாகவும், சுயராஜ்ய கர்த்தாக்களாகவும், பாடுபடுகிற ஜனங்களெல்லாம் அடிமைகளாகவும், பாவிகளாகவும் இருந்து கொண்டு பட்டினி கிடப்பவர் களாகவும் இருந்து வரும் முறைதான் இன்றைய கராச்சி காங்கிரஸ் சுயராஜிய திட்டமென்பதை யுணருங்கள். எந்தத் திட்டத்தில் ஏழையென்றும், அடிமையென்றும், ஈனனென்றும், மக்கள் பிறவியில்லையோ அதுதான் சுயமரியாதை இயக்கத்திட்டம். எந்தத் திட்டத்தில் முதலாளியென்றும், தொழிலாளியென்றும் ஜாமீன்தாரனென்றும் குடியானவனென்றும் மடாதி பதிகளென்றும் சிஷ்யர்களென்றும், பிராமணனென்றும் சூத்திரனென்றும், பறையன் என்றும், பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சாஸ்திரப்படியுள்ள பிறப் புரிமை காப்பாற்றத் திட்டம் போடப்பட்டிருக்கின்றதோ அதுதான் சுயராஜியத் திட்ட மென்பதை யுணருங்கள், 

நாற்பத்தைந்து வருஷகாலம் காங்கிரஸ் இருந்து வந்தும், வோக மானியர்கள், வோகநாயகிகள், மகாத்மாக்கள், தெய்வீக அவதாரச் சக்தியு டையவர்கள், வீரர்கள், தியாகிகள் என்பவர்கள் காங்கிரசுக்குத் தலைமை வகித்து காங்கிரசை குரங்கு போல் ஆட்டி வந்தும் இன்னமும் இந்த நாட்டை விட்டு பறையரும், சண்டாளரும், முகாலோபம் செய்யக்கூடாத இழிவான மனிதரும் ஒழிந்த பாடில்லை. ஒழிவதற்குரிய அறிகுறிகளும் காணப்பட வில்லை என்றால் காங்கிரசும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றா என்பதை யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பிராமணனும், பூதேவனும், சூத்திர னும், பஞ்சமனும், பாக்கியவானும், நிர்ப்பாக்கியவானும் இந்த நாட்டை விட்டு ஒழிந்த பாடில்லை. ஒழியும் மார்க்கங்களும் குறிப்பிடப்படவில்லை என்றால் காங்கிரசும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றா? என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் ஏழைமக்கள் கோடிக் கணக்காக கஞ்சிக்குத் திண்டாடிக்கொண்டு படிப்பில்லாமல் துணியில்லாமல், மனிதத்தன்மை யில்லாமல் நாயாய், கழுதையாய், பன்றியாய், ஏன் அதற்கும் கேவலமாய் நடத்தப்பட்டு வருவதொருபுறமிருக்க, கல்லுகளை ஆட்டுக்கல்லாகவும், குழவிக் கல்லாகவும் ஆக்கி ஒன்றுக்குள் ஒன்று சிக்க வைத்து அதன் தலைகளில் தேன். பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகங்களை செய்து கொண்டு அவைகளுக்குப் பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி கற்பித்து பட்டு, பட்டாடை, வயிரக்கெம்பு நகைகளை சாத்தி கட்டை முட்டிகளையடுக்கி அதன் மீது தூக்கி வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் சுமப்பதையும், பதினாயிரக்கணக்கான மக்களிழுப்பதையும் இதற்காக இந்த நாட்டில் மாத்திரம் பல கோடிக்கணக் கான ரூபாய்கள் பாழாவதையும் பார்த்தும் காங்கிரஸ், ஏனென்று கேட்க வில்லை. அப்பக்கம் திரும்பியும் கூட பார்க்கவில்லை என்றால் இனியும் கூட காங்கிரசும், சுயமரியாதை இயக்கமும் ஒன்றா? என்பதை யோசித்துப் பாருங்கள். 

இந்த நாட்டின் வாழ்க்கை முறையானது வியாபாரத்தின் மூலம், வட்டி வாங்குவதின் மூலம், புரோகிதம், குருஸ்தானம், உத்தியோகம் முதலியவை களின் மூலம் பாடுபடுவர்களுடைய செல்வமெல்லாம், வரும்படியெல்லாம் சிலரிடமே போய் பெருகவும், அவர்கள் அதை தங்களுடையதேயென்று பாழாக்கவுமான மாதிரியிலேயே பாழாக்கத்தகுந்த வாழ்க்கைத் திட்டமிருந்து வருகிறது. இதைப் பற்றி எந்தக் காங்கிரசும் திரும்பிப் பார்க்கவேயில்லை. ஆனால் நேற்றுத் தோன்றிய சுயமரியாதை இயக்கம் இம் மாதிரி யானத் தன்மைகளையெல்லாம் ஒழித்தாக வேண்டுமென்றே சொல்லுகிறது. இந்த வேலையைத்தான் விடுதலை மார்க்கம் என்று சொல்லுகின்றது. காங்கிர சானது. வெள்ளைக்காரன் அனுபவித்து வரும் போக போக்கியத்தை இந்த நாட்டுப்பணக்காரனும், படித்தவனும், பார்ப்பனனும், மகாத்மாக்களும், தேசிய வாதிகளும், அனுபவிக்க வேண்டுமென்கின்ற ஆசைக்காக "வெள்ளைக்கார இராஜியம் இந்நாட்டை விட்டுப் போக வேண்டு" மென்கிறது. சுயமரியாதை இயக்கமானது இந்த நாட்டு செல்வத்தையும், இன்பத்தையும், இயற்கை வளத்தையும், எல்லா மக்களும் சமமாக அனுபவிக்கவும், இந்த நாட்டு சொத்துக்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொதுவானதாயிருக்கவும் இந்த நாட்டு மக்களெல்லாம் பிறவியில் உயர்வு - தாழ்வு என்பது சிறிதுமில்லாமல் சகோதரர்கள் போலிருக்கவும். இந்நாட்டுச் சோம் பேரிகள் சூட்சிக்காரர்கள் பாமர மக்களை யேமாற்றாமலிருக்கவுமான காரியங்களுக்கு மாத்திரந்தான் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இந்த நாட்டை விட்டுப் போய்த்தீரவேண்டு மென்று சொல்லுகிறது. இந்த நாட்டிலுள்ள ஜமீன்தாரர்களுடைய அக்கிரமம் சகிக்க முடியவில்லை. மிராசுதாரர்களுடைய அநீதி, கொடுமை ஆகியவை கள் நிர்வகிக்க முடியவில்லை, பார்ப்பனர்களுடைய அகம்பாவமும் ஏமாற்று தலும் நினைக்கமுடிய வில்லை. இரண்டு இங்கிலீஷ் எழுத்துகள் தெரிந்து விட்டதனாலேயே படித்தவர்களென்று சொல்லப்படுவர்களின் பகல் கொள்ளை தாங்க முடிய வில்லை. இவைகளை யெல்லாம் அழிப்பதற்கு காங்கிரஸ் என்ன செய்கிறது? இத்தனை பேரையும் காப்பாற்ற காங்கிரஸ் பாடுபடுகின்றதா? இல்லையா? என்று உங்கள் மனதைக் கேளுங்கள். உங்கள் அறிவைக் கேளுங்கள். உங்கள் அனுபவத்தைக் கேளுங்கள், உங்கள் நாணையத்தை கேளுங்கள். 

ஆனால் சுயமரியாதை இயக்கமானது இந்த மாதிரியான பிரிவுகள் கூடாதென்பதோடு இதற்கு ஆதாரமாய் இருந்து வருவதான எதுவும் கூடாது. அவைகள் எல்லாம் அடியோடு அழிக்கப்பட வேண்டுமென்றல் மவா சொல்லுகின்றது. 

சகோதரர்களே! இந்த கோவில்களைக் கண்டால், இந்தத் தேர் திரு விழாக்களைக் கண்டால், இதன் சொத்துக்களைக் கண்டால் உங்களுக்கு வயிறு பற்றி எரியவில்லையே. அதற்கு பதிலாக ஆநந்த பாஷ்டம்" பெருக் குகின்றீர்களே! பிள்ளைக்குட்டிகளுடன் விழுந்து கும்பிடுகின்றீர்களே! இந்த ஜால வித்தைக்காரர்கள் உங்களை எவ்வளவு முட்டாள்களாக்கி வைத் திருக்கிறார்களென்பதை இதிலிருந்தாவது சிந்தித்துப் பாருங்கள். 

இந்த மடாதிபதிகள் உங்கள் செல்வத்தை கொள்ளை கொண்டு சோம் பேறிகளைக் கூட்டி வைத்து “மதன கோலாகலக்கிரீடை" "ஜலக்கிரீடை" “கிருஷ்ண லீலை" நடத்துகின்றார்களே! உங்களுக்கு ஆத்திரமில்லையா? அதற்கு பதிலாக விழுந்து கும்பிட்டு கால்கழுவின தண்ணீரைக் குடித்துக் காணிக்கை செலுத்துகின்றீர்களே! உங்களுக்கு மதியில்லை, மானமில்லை என்பதை இப்போதாவது உணருகிறீர்களா? 

நான் போக்கிரியாய் இருக்கலாம்.காவியாய் இருக்கலாம், கூலியாய் இருக்கலாம். இந்த கோவிலும், மடமும், இருப்பதும், இவற்றை நீங்கள் விழுந்து கும்பிட்டுக் கன்னம் கன்னமாய் போட்டுக் கொள்வதும். அறிவுள்ள, மானமுள்ள மனிதனுடைய செயலா? என்றுதான் கேட்கின்றேன். இவை களை ஒழிக்கவேண்டாமா? இந்தச் சொத்துக்களை எடுத்துக் கல்விக்கும். அறிவுக்கும், மானத்திற்கும், மனிதத்தன்மைக்கும் செலவழிக்க வேண்டாமா? என்றுதான் கேட்கின்றேன். 

நீங்கள் என்னைப் பார்த்துக் கோபிப்பதிலோ, ஆத்திரப்படுவதிலோ சிறிதும் பயனில்லை, இதனால் நீங்கள் என்னை என்செய்வீர்கள் என்பதிலும் எனக்குக் கவலை இல்லை. உங்களை வாழவைக்கும்' காங்கிரசு, அதுவும் கராச்சிக் காங்கிரசின் யோக்கியதையைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் மானத்திற்கும், மதிக்கும், மனிதத்தன்மைக்கும் இந்தக் கராச்சிக் காங்கிரசு என்ன செய்தது. செய்கின்றது. செய்யக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். 

உங்கள் இத்தனை பேரையும் இந்த நிலைமையிலேயே இருக்கச் செய்யத்தானே காங்கிரஸ் கர்த்தாவாகிய மகாத்மா என்பவர் காலையும் மாலையும், "ராம் ராம். சீத்தாராம்' என்று பஜனைபாடுகிறார். பிரார்த்தனை செய்கின்றார், கீதைபடிக்கிறார். அவர்களது சீஷர்களும் சென்ற விட மெல்லாம், புராணப் பிரசங்கம் செய்கிறார்கள். இது உங்களுக்குப் புரிய வில்லையா? 

ஆகவே கடவுள் பூஜையிலும், பிரார்த்தனையிலும், ராம பஜனை யிலும், புராண காலக்ஷேபத்திலும் இருந்து ராம ராஜியம் அடைய வேண்டு மென்கின்றீர்களா? அல்லது இவற்றையெல்லாம் அழித்து, ஒழித்து மனித தர்மம் ராஜியம் வேண்டுமென்கின்றீர்களா? என்பதுதான் இப்போது உங்கள் முன் நிற்கும் கேள்வி. அது வேண்டுமானால் காங்கிரசில் சேருங்கள். இது வேண்டு மானால் சுயமரியாதையில் சேருங்கள். இரண்டும் ஒன்று" என்று மாத்திரம் சொல்லாதீர்கள் என்றுதான் சொல்லுகின்றேன். மற்றபடி உங்கள் இஷ்டம். 

குறிப்பு : திருவாரூர் கமலாலயத்துக்கு முன்புறம் உள்ள தெப்புக்குளத்து வாந்தானத்தில் ஆற்றிய உரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1931

 
Read 37 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.